முதலீடு செய்து வருவாய் ஈட்ட ஆசை.. ஆசை..! நான்கு வழக்கில் 25 கோடிஇழப்பு

கோவை: முதலீட்டு ஆசையை துாண்டி கோடிகளில் பணம் வசூலித்து மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகன்றன.

மாநகர பொருளாதார குற்றப்பிரிவில் நடப்பாண்டு, 4 வழக்குகள் பதிவாகி , 1,000 பேர் பாதிக்கப்பட்டு, ரூ.25 கோடிக்கு நிதிமோசடி நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆன்லைன் டெபாசிட், அதிக வட்டி, ஏலச்சீட்டு, ரியல் எஸ்டேட் முதலீடு, நில சேமிப்பு திட்டம் என்று மக்களிடம் பணத்தை டெபாசிட்டாக பெறுகின்றனர். இதில் ஓய்வு பெற்றவர்கள, பெற போகிறவர்கள் ஏராளமாய் சிக்கியுள்ளனர்.

ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ரூ.10,000 மாத வருவாய் கிடைக்கும் என்று அறிவிப்பு வெளியிடுவதோடு, விளம்பரம் பார்ப்பது, ஒரு விளம்பரத்தை வேறு ஒருவருக்கு அனுப்புவது என்று ஆசை வார்த்தை மூலம் மோசடிகளை அரங்கேற்றுகின்றனர்.

புதிதாக சேரும் முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு வழங்கி, திட்டம் முறையாக செயல்படுவது போன்ற நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர்.

இதை நம்பி முதலீட்டாளர்கள் கூடுதல் பணம் செலுத்துவதோடு, தங்களுக்கு தெரிந்தவர்களையும் சேர்க்கின்றனர். குறிப்பிட்ட பணம் வசூலானதும் பணம் வழங்குவதை நிறுத்தி, அலுவலகத்தை மூடி தொடர்பை துண்டித்து, முதலீட்டாளர்களை ஏமாற்றத்துக்குள்ளாக்குகின்றனர்.

சந்தையில் வழக்கமாக கிடைக்கும் வருவாயைவிட அதிக வட்டி அல்லது குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என உறுதி அளிக்கும் திட்டங்களில் மக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

தீபாவளி நேரம் கவனம் !





பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில்,'ஆன்லைன் முதலீடு, கூடுதல் வட்டி, அதிக லாபம் போன்ற விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாறாமல் விழிப்புடன் இருக்க வேண்டும். 'இப்போதே முதலீடு செய்ய வேண்டும். இன்றுதான் கடைசி வாய்ப்பு என அவசரப்படுத்தினால் கவனமாக இருக்க வேண்டும். சட்டபூர்வ விஷயங்கள் சரியாக இருந்தால் முதலீடு செய்யலாம்,' என்றனர்.

Advertisement