உடல்ரீதியாக கிண்டல் செய்வது மானபங்கம் ஆகாது: ஐகோர்ட்

பெங்களூரு: பெண்ணை உடல்ரீதியாக கிண்டல் செய்வது மானபங்கம் ஆகாது என்று கூறி, இரண்டு பெண்கள் மீதான வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பெங்களூரின் சதாசிவநகரில் வசிக்கும், 26 வயது இளம்பெண், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி இரவு, சாலையில் தனியாக நடந்து சென்றார். அப்போது ஒரு வாலிபரும், இரண்டு இளம்பெண்களும் சேர்ந்து, 26 வயது இளம்பெண்ணின் உடல் அமைப்பை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சதாசிவநகர் போலீசில் இளம்பெண் புகார் செய்தார்.

புகாரின்படி இரண்டு இளம்பெண்கள், வாலிபர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவானது. தன் மீதான வழக்கை எதிர்த்து, அந்த வாலிபர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், வாலிபர் மீதான வழக்கை ரத்து செய்தது. இதை தொடர்ந்து, இரண்டு இளம்பெண்களும், உயர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்தார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நேற்று முன் தினம் தீர்ப்பு கூறினார்.

நீதிபதி கூறியதாவது:

ஒரு பெண்ணின் உடல் தோற்றத்தை பற்றி பேசுவது அல்லது திட்டுவது தவறான நடத்தை தான். ஆனால் அது மட்டுமே பெண்ணை மானபங்கம் செய்வது ஆகிவிடாது. இதே வழக்கில் வாலிபர் மீதான வழக்கு ரத்து செய்யப் பட்டுள்ளது.

இவ்வழக்கில் மானபங்கம் செய்ததாக எந்த சாட்சியமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement