காற்றில் பறக்கும் அதிகாரியின் உத்தரவு: பஸ் நிறுத்தாததால் பொதுமக்கள் அவதி

விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு ஊழியர் நகரில், அதிகாரிகள் ஆணையிட்டும் பஸ்கள் நிறுத்தாததால் 14 ஆண்டுகளாக மக்கள் தவித்து வருகின்றனர்.விழுப்புரம் அருகே கண்டமானடி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு ஊழியர் நகர் உள்ளது. இக்குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதேபோல், இதனைச்சுற்றி ஏராளமான குடியிருப்புகளும், போலீசார் காவலர் குடியிருப்புகளும், அரபிக் கல்லுாரியும் உள்ளன.விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் பைபாஸ் மேம்பாலத்தை கடந்துள்ள இந்த அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் பஸ் நிறுத்த நிழற்குடையுள்ளது. ஆனால், பஸ்கள் தான் நிறுத்துவதில்லை. இதனால், கடந்த 14 ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, குடியிருப்பு சங்கத் தலைவர் சகாதேவன் உள்ளிட்டோர் கூறியதாவது: போக்குவரத்து ஊழியர் குடும்பத்தினர், தொழிலாளர்கள், மாணவர்கள், போலீசார் உள்ளிட்டோர் வேலைக்கும், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வதற்கும், பஸ்சுக்காக நீண்டநேரம் காத்திருக்கின்றனர். ஆனால், அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் நிற்பதில்லை. அரசு போக்குவரத்துக்கழக மேலாளரிடம் புகார் மனு அளித்ததும், அரசு பஸ்கள் கண்டிப்பாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என கடந்த 10 ஆண்டுக்கு முன்பே உத்தரவு போட்டுள்ளார். அடிக்கடி சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளனர். ஆனால், பஸ்கள் நிற்பதில்லை. எப்போதாவது டவுன் பஸ் மட்டும் நிறுத்தி செல்கின்றனர்.இதனால், நீண்ட தொலைவில் உள்ள பிடாகம் அல்லது ஜானகிபுரத்தில் இறங்கி, மேம்பாலத்தை கடந்து நடந்து செல்ல வேண்டியுள்ளது. நீண்டநேரம் பஸ்சுக்கு காத்திருக்கும்போது, வழிப்பறி சம்பவம், பெண்கள் மீது தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசு ஊழியர் நகர், காவலர் குடியிருப்பு மக்கள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு போக்குவரத்து ஊழியர்கள் குடியிருப்பாக இருந்தும், அரசு பஸ்களே நிறுத்தாத அவல நிலை உள்ளது. இது குறித்து, அமைச்சர், கலெக்டர், போக்குவரத்து கழக மேலாளர் என பல மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.

Advertisement