ஓட்டு வங்கி பயத்தில் ஸ்மிட் மச்சாரை பாராட்டாத ராகுல்: பாஜ

44

புதுடில்லி: '' 'ஓட்டுவங்கிக்கு மிகவும் அஞ்சி', மச்சாரின் வீரத்தைப் பாராட்டி ஒரு வார்த்தைகூட பேச முடியாமல் ராகுல் தவிக்கிறார்,'' என பாஜ குற்றம்சாட்டி உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு, கடந்த செப்., 30ல் சென்ற, 'பிளை துபாய்' நிறுவனத்தின் விமானத்தை, அதன் துணை விமானி கடத்த முயன்றார். அதை தடுத்த, நம் நாட்டின் மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்மிட் மச்சார், கடுமையாக தாக்கப்பட்டார். கடுமையாக காயமடைந்த நிலையிலும், 174 பயணியர் உட்பட, விமானத்தில் இருந்த 180 பேரின் உயிரை விமானி ஸ்மிட் மச்சார் காப்பாற்றியுள்ளார். இதனால் அவருக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிகிறது. அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர். இந்தியர்கள் ஸ்மிட் மச்சாரை புகழ்ந்து தள்ளுகின்றனர். ஆனால், காங்கிரஸ் இதுவரை ஸ்மிட் மச்சார் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக பாஜ செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்பியுமான சுதான்ஷூ திரிவேதி கூறியதாவது: இந்த தருணம் இந்தியா பெருமைப்பட வேண்டியது. ஆனால், அவமானப்பட வேண்டிய தருணமும் உள்ளது. கேப்டன் ஸ்மிட் மச்சாருக்காக காங்கிரஸ் குடும்பத்திடம் இருந்து ஒரு வார்த்தை, சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கை, ஒரு பத்திரிகை செய்தி கூட வரவில்லை. இது தீவிரமான பல கேள்விகளை எழுப்புகிறது. காங்கிரஸ் தலைமை அமைதி காக்கும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் வெளிநாட்டு தலைவர்கள் மச்சாரின் வீரதீரத்தை பாராட்டி வருகின்றனர். ஒரு காலத்தில் காசா விவகாரத்தில் மிகவும் வருத்தமடைந்த, சோனியா குடும்பத்தின் 'தடம் மாறிய இளவரசரான' ராகுல், தற்போது 'ஓட்டுவங்கிக்கு மிகவும் அஞ்சி', மச்சாரின் வீரத்தைப் பாராட்டி ஒரு வார்த்தைகூட பேச முடியாமல் தவிக்கிறார். இவ்வாறு சுதான்ஷூ திரிவேதி கூறினார்.

Advertisement