17 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
காரைக்கால்: காரைக்காலில் 17 வயது சிறுமியை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் அவரது பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
காரைக்கால், மஸ்தான் பள்ளி வீதியைச் சேர்ந்தவர் மதிவாணன் மகன் வெங்கடேஸ்வர பாலாஜி, 22; பிளம்பர். இவர் கல்லுாரி பயின்ற 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரியவந்ததால், வெங்கடேஸ்வர பாலாஜி தனது பெற்றோருடன் இணைந்து சிறுமியை அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று, குடும்பம் நடத்தியுள்ளார்.
இதற்கிடையே, வெங்கடேஸ்வர பாலாஜி, அடுத்த சில தினங்களில் சிறுமியிடம் எந்தவித தகவலுக்கு சொல்லாமல் திடீரென தலைமறைவானார்.
இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருடன் காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், வெங்கடேஸ்வர பாலாஜி மற்றும் அவரது தந்தை மதிவாணன், தாய் இந்திரா ஆகியோர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி வெங்கடேஸ்வர பாலாஜிக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ. 20,000 அபராதம், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை மதிவாணன், தாய் இந்திரா ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.