தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்கள்: சந்தைக்கடையாக பஸ் ஸ்டாண்ட்

பல்லடம்: பல்லடம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பயணிகள் ஓடி பஸ் ஏறும் நிலை ஏற்பட்டு, விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.

திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, உடுமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் பல்லடம் வழியாக இயக்கப்படுகின்றன. இதனால் பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் புறநகர் பஸ்கள் முறையாக நிறுத்தப்படாமல், குறிப்பாக திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி செல்லும் பஸ்கள் நுழைவாயில் பகுதியிலேயே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்குகின்றன.

பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், நுழைவாயிலில் பஸ் நிற்பதை பார்த்ததும் ஓடிச்சென்று ஏறுகின்றனர். ஒரே நேரத்தில் பயணிகள் ஏறி, இறங்குவதால் அடுத்தடுத்து வரும் பஸ்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பூர், கோவை செல்லும் பஸ்களில் அதிகளவில் பயணிகள் செல்வதால், நுழைவாயிலில் பஸ்கள் நிறுத்தப்படுவது பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

பல்லடம் பஸ் ஸ்டாண்டில் திருப்பூர், கோவை செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தை மாற்றி அமைத்து, மற்ற பஸ்கள் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதைத் தடுக்க போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பல்லடம் பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.

Advertisement