மதுக்கடைகளை பாதுகாப்பதை விட மலைகளை பாதுகாப்பது முக்கியம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
மதுரை: 'மதுக்கடைகளை பாதுகாப்பதை விட, இயற்கை வளமான மலைகளை பாதுகாப்பது முக்கியம்' என, மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கல் குவாரிக்கு தடை கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்தது.
நம்மாழ்வார் இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் பெத்தணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'பேரையூர் அருகே எஸ்.பாப்பிநாயக்கன்பட்டி மற்றும் பி.சங்கரலிங்காபுரத்தில் 'ஓணான் கரடு' அல்லது 'பெருமாள் மலை' என்ற பெயரில் மலைக்குன்று உள்ளது. இதில், முதுமக்கள் தாழி, வட்டெழுத்துக்கள் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்கள் உள்ளன. இங்கு கல் குவாரி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் சின்னங்கள், இயற்கை வளத்திற்கு பாதிப்பு ஏற்படும். குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரி இருந்தார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
நீதிபதிகள், 'மதுக்கடைகளை பாதுகாப்பதில் செலுத்தும் அக்கறையை, பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை. மதுக்கடைகளை பாதுகாப்பதை விட இயற்கை வளமான மலைகளை பாதுகாப்பது முக்கியம். இயற்கை வளங்களை சுரண்டினால் திரும்ப கிடைக்குமா?' என, கேள்வி எழுப்பி, தமிழக கனிமவளத்துறை கமிஷனர், தொல்லியல் துறை இயக்குநர், கலெக்டர் நவ., 2ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
ஏன் பாஸ், இதை கடந்த கால திருட்டு திமுக ஆட்சியில் சொல்லியிருந்தால், மலைகளை காப்பாற்றி இருக்கலாம். அந்த நாசகார கும்பல் அனைத்தையும் வெட்டி விற்பனை செய்து, முழுங்கி ஏப்பம் விட்ட பிறகு, நீங்கள் இப்பொழுது சொல்வது, "கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" செய்வது போன்றது. இருந்தாலும் மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழும் உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.