தினமும் ரூ.3,000 நஷ்டம்: தனியார் பஸ் உரிமையாளர்கள் வேதனை

அன்னுார்: 'கோவை சத்தி வழித்தடத்தில் தினமும் 3,000 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது' என தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் வேதனை தெரிவித்தனர்.

தமிழகத்தில், 2021ம் ஆண்டு முதல் சாதாரண டவுன் பஸ்களில், மகளிருக்கு இலவச பயணம் செயல்படுத்தப்பட்டது. கடந்த 2ம் தேதி முதல் எல்.எஸ்.எஸ்., சொகுசு மற்றும் தாழ்தள டவுன் பஸ்களுக்கும், சாதாரண புறநகர் பஸ்களுக்கும் (மப்சல்) விரிவுபடுத்தப்பட்டது. கோவையில் இருந்து அன்னுார், புளியம்பட்டி, வழியாக சத்தி வரை இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழகத்தின் 18 பஸ்களிலும், அன்னுார் கிளையை சேர்ந்த 45 டவுன் பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:

கோவையிலிருந்து அன்னுார், புளியம்பட்டி வழியாக சத்திக்கு, தலா மூன்று முறை சென்று திரும்பி வருகிறோம். 410 கி.மீ., பஸ் பயணிக்கிறது. டீசலுக்கு மட்டும் 9,000 ரூபாய் ஆகிறது. நடத்துனர், ஓட்டுனர் சம்பளம் 2,500 ரூபாய் வருகிறது. ஆண்டுக்கு இன்சூரன்ஸ் ஒரு லட்சம் ரூபாய், சாலை வரி ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய், ஆண்டுக்கு ஒருமுறை தகுதி சான்று பெறுவதற்கு, ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டி உள்ளது.

கடந்த வாரம் வரை தினமும் கோவையிலிருந்து சத்திக்கு மூன்று முறை சென்று வந்தால் 1,000 முதல் 1,100 பயணிகள் பயணம் செய்வார்கள். 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வசூலாகி வந்தது. இரண்டு நாட்களாக 10 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை மட்டுமே வசூலாகிறது. 700 பேர் மட்டுமே பயணிக்கின்றனர். வசூலாகும் தொகை, டீசலுக்கு மட்டும் போதுமானதாக உள்ளது. கோவையில் இருந்து அன்னுார் வழியாக சத்திக்கு இயக்கப்பட்டு வரும் 12 தனியார் பஸ்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அரசு, தனியார் பஸ்களுக்கும் மானியம் அளித்தால், மகளிரை இலவசமாக அழைத்துச் சென்று வர தயாராக இருக்கிறோம்.

Advertisement