ஆனந்துாரில் செயல்படாத 'சிசிடிவி' :குற்றச்சம்பவம் அதிகரிக்க வாய்ப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துாரில் பராமரிப்பின்றி பயனற்ற நிலையில் உள்ள சிசிடிவி., கேமராக்களால் திருட்டு, விபத்து உள்ளிட்டவைகளில் குற்றவாளிகள் எளிதில் தப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளதால் இங்கு ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள பஸ்ஸ்டாண்டில் இருந்து பல்வேறு பெரிய நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் பஸ்ஸ்டாண்ட் பின்புறம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு சார்பில் சிசிடிவி., கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டன. கேமராக்களின் செயல்பாட்டை கண்காணித்த அதிகாரிகள் அதன் பின் கண்டுகொள்ளாததால் கேமராக்கள் பழுதாகியுள்ளன.
மேலும் கேமரா பதிவுகள் தெரியாத வகையில் பெரும்பாலான நேரங்களில் பிளக்ஸ் போர்டுகளை வைத்து நிரந்தரமாக மறைக்கும் செயல்களிலும் அதிகாரிகளின் உதவியுடன் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
கேமராக்கள் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறை மற்றும் போலீசார் இதை கண்டும் காணாதது போல் உள்ளனர்.
இதனால், திருட்டு, விபத்து உள்ளிட்ட குற்றங்களின் போது, குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது. குற்றச் செயல்கள் நடக்கும் போது மட்டும் போலீசார் கேமராக்களை ஆய்வு செய்வதும், அதன் பின் கேமராக்கள் பழுதடைந்துள்ளதால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கும் நிலை உள்ளது.
எனவே சிசிடிவி., கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குற்றச் செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.