ஜி.எஸ்.டி., சாலையில் 15 அடி நீள பள்ளம் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் எதிரே, தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வகிக்கும் ஜி.எஸ்.டி., சாலையில் 15 அடி நீளத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அபாயத்தில் தினமும் திணறி வருகின்றனர்.

நந்திவரம் -– கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையம் எதிரே, ஜி.எஸ்.டி., சாலையில், 5 அடி அகலம், 15 அடி நீளத்திற்கு பள்ளம் விழுந்தது. இந்த பள்ளத்தில், ‘பேட்ச் ஒர்க்’ எனும் சாலை ஒட்டு பணியை, நெடுஞ்சாலை துறையினர் கடந்த மாதம் செய்தனர்.

தார் பயன்படுத்தாமல், கான்கிரீட் கலவையால் சீரமைத்ததால், அதன் பூச்சு பெயர்ந்து, மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. தற்போது அது பெரிதாகி, வாகன போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதோடு, வாகன ஓட்டிகள் தினமும் விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

ஜி.எஸ்.டி., சாலையில், ஒரு மணி நேரத்திற்கு 5,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. தற்போதுள்ள பள்ளத்தில் சிறிய, நடுத்தர மற்றும் கனரக வாகனங்களின் சக்கரங்கள் ஏறி இறங்குவதால், பள்ளம் தொடர்ந்து பெரிதாகி வருகிறது.

நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியேறும்போது ஜி.எஸ்.டி., சாலையில் வரும் வாகன ஓட்டிகள், இந்த பள்ளத்தால் திடீரென தடுமாறுகின்றனர்.

மேலும், சீரான வேகத்தில் வரும் வாகன ஓட்டிகள், பள்ளத்தை கண்டதும், திடீரென வேகத்தை குறைப்பதால், பி ன்னால் வரும் வாகனங்கள் மோதி, விபத்தை சந்தித்து வருகின்றனர். தினமும், 20க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்த பள்ளத்தால், உயிர் பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது. தேசிய நெடுஞ்சாலை துறையினர், ஜி.எஸ்.டி., சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement