பெண் பத்திரிகையாளர் மீது பாலியல் சீண்டல் என்று போலி படம் வெளியிட்ட நதீம் அஹமது கைது

17

புதுடில்லி: டில்லியில், கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விவேக் பகத், பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போல, ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி புகைப்படங்களை பரப்பியதாக, ஹரியானாவைச் சேர்ந்த நதீம் அஹமது, 24, என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தலைநகர் டில்லியில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை கண்டித்து, சில நாட்களாக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அந்த வகையில், ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 3ல் போராட்டம் நடந்தது. அங்கு செய்தி சேகரிக்க சென்ற போது, கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் விவேக் பகத், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பெண் பத்திரிகையாளர் ரோசி என்பவர் குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, ரோசியிடம், போலீஸ் அதிகாரி விவேக் பகத் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

இந்த படங்களின் உண்மைத்தன்மை குறித்து, டில்லி போலீசார் நடத்திய விசாரணையில், அப்படங்கள், 'நியூஸ் ஆயினா' என்ற, 'யூ டியூப்' சேனலுடன் தொடர்புடைய கணக்கிலிருந்து பகிரப்பட்டது கண்டறியப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீசார், அந்த யூ டியூப் சேனலை நடத்தி வந்த ஹரியானாவைச் சேர்ந்த நதீம் அஹமதை நேற்று கைது செய்தனர். இது குறித்து, போலீசார் கூறியதாவது:

தன்னை பத்திரிகையாளர் என, நதீம் அஹமது கூறினார். மதரசா பள்ளி ஒன்றில் படித்த அவர், 10ம் வகுப்பை பாதியிலேயே கைவிட்டவர். டில்லி போலீசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே. அந்த போலி படங்களை பரப்பியதாக, விசாரணையில் அவர் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து, ஏ.ஐ., படங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட பல தொழில்நுட்பக் கருவிகளை பறிமுதல் செய்துள்ளோம்.

அவரை பின்னணியில் இருந்து இயக்கியது யார், இது திட்டமிடப்பட்ட நிகழ்வா, இதில் பிற நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த செயலுக்கு ஏதேனும் நிதி உதவி கிடைத்ததா, வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பு உள்ளதா, பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement