தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; ஓட்டுப்பதிவு துவக்கம்

1

புதுச்சேரி: புதுச்சேரி அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தட்டாஞ்சாவடி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (அக் 06) காலை 7 மணிக்கு துவங்கியது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இத்தொகுதியில் வெற்றி பெற்று, தனது மற்றொரு தொகுதியான மங்கலத்தைத் தக்கவைத்துக்கொள்ள தட்டாஞ்சாவடியை ராஜினாமா செய்ததை அடுத்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கே அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் முகவர்கள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 7 மணிக்குத் தேர்தல் அலுவலர்கள் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை உறுதிசெய்து ஓட்டுப்பதிவைத் துவங்கி வைத்தனர்.

காலை நேரக் குளிர்ந்த சூழலைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணி பொதுமக்கள், காலை 6:30 மணி முதலே வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஓட்டுச்சாவடிகளில் திரளத் துவங்கினர். தொகுதிக்குட்பட்ட அனைத்து மையங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஓட்டுகளை மிகவும் அமைதியான முறையில் பதிவு செய்து வருகின்றனர். ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், தி.மு.க., சார்பில் சேதுசெல்வம், காங்கிரஸ் சார்பில் விநாயகம், இ.கம்யூ., கட்சி சார்பில் சலீம் உட்பட மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் பிரசாரம் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்த சூழ்நிலையில் வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்டனர். 31 ஓட்டுச்சாவடிகளில் 46 கன்ட்ரோல் யூனிட், 46 பேலட் யூனிட், 48 வி.வி., பாட் இயந்திரம் என 140 ஓட்டு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிக்கு வர இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட 67 மூத்த குடிமக்களும், 37 மாற்றுத்திறனாளிகளும் தங்களது வீடுகளில் இருந்தபடியே ஓட்டளிக்கும் சிறப்பு வசதியைப் பயன்படுத்தி ஜனநாயகக் கடமை ஆற்றி உள்ளனர்.

இதுதவிர, தேர்தல் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள 5 ஓட்டுசாவடி நிலை அலுவலர்களும் தங்களது தபால் ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். ஓட்டுச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் தேர்தல் உதவிச்சாவடிகள் அமைப்பதற்கு விண்ணப்பித்த 3 வேட்பாளர்களுக்கும் உரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டுப்பதிவு மையத்திற்குள் பார்வையாளர்கள் மற்றும் ஓட்டுச்சாவடித்தலைமை அதிகாரியைத் தவிர வேறு யாரும் மொபைல்கொண்டு செல்ல அனுமதியில்லை.இருப்பினும், மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக, தங்களது மொபைல்களை பாதுகாப்பாக ஒப்படைக்க தன்னார்வலர்கள் மூலம் ஓட்டுச்சாவடிகளில் பிரத்யேக வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்களது குழந்தைகளை ஓட்டுசாவடிக்கு அழைத்து வர வேண்டாம் என்றும், வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஈரத்துண்டினை உடன் எடுத்து வருமாறும் தேர்தல் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து வாக்காளர்களும் ஓட்டளிக்கும் வகையில், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலையொட்டி 700க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு பதிவு முடிந்ததும் ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 9 ம்தேதி ரிசல்ட் அறிவிக்கப்பட உள்ளது.

Advertisement