மண் சறுக்கி லாரி சக்கரத்தில் சிக்கி முதியவர் பரிதாப பலி

கோவிலம்பாக்கம்: தண்ணீர் லாரிக்கு வழிவிட முயன்றபோது சாலையோர மண் சறுக்கியதில், கீழே விழுந்த 75 வயது முதியவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்.

கோவிலம்பாக்கம், எஸ்.கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா, 75. இவர் நேற்று மாலை 6:30 மணியளவில், பல்லாவரம் - துரைப்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு, தன் மொபட்டில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, எஸ்.கொளத்துார் ஏரி அருகே உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு, 200 அடி சாலை நோக்கி தண்ணீர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அங்கன்வாடி அருகே எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக கருப்பையா மொபட்டை சாலையோரமாக ஒதுக்கினார்.

அப்போது சாலையோரம் குவிந்திருந்த மணலில் மொபட் சறுக்கியதில், கருப்பையா நிலைதடுமாறி லாரியின் சக்கரத்தின் முன் விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் லாரி சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி உயிரிழந்தார்.

லாரி ஓட்டுநர் பஷீர் அகமது, 36, என்பவரை பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், கைது செய்தனர். தொடர்ந்து கருப்பையாவின் உடலை தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement