மின் இணைப்பு வழங்க இழுத்தடிப்பு

பல்லடம்: டிரான்ஸ்பார்மர் கையிருப்பில் இல்லை எனகூறி, புதிய மின் இணைப்பு வழங்குவதில் மின்வாரியம் தாமதம் செய்வதாக பல்லடம் வட்டாரத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பல்லடம் பகுதியில் விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, சாய ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செயல்பட்டு வருகின்றன.

புதிதாக தொழில் தொடங்குவோர் தேவையான அரசு அனுமதிகளைப் பெற்று, மின் இணைப்புக்காக விண்ணப்பித்தும் இணைப்பு கிடைக்காமல் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

வாவிபாளையத்தைச் சேர்ந்த மனோன்மணி கூறுகையில், ‘டிராக்டர் ஒர்க் ஷாப் தொடங்க நிரந்தர மின் இணைப்புக்காக விண்ணப்பித்து, கட்டணங்களையும் செலுத்தியுள்ளேன். விண்ணப்பித்து 90 நாட்களாகியும் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்புக்காக விண்ணப்பிக்கும்போது, ஏற்கனவே இருந்த தற்காலிக இணைப்பை துண்டிக்க வேண்டும் என மின்வாரியம் தெரிவித்ததால் அதையும் துண்டித்துவிட்டேன்.

தற்போது மின் வசதி யின்றி தொழிலை தொடங்க முடியவில்லை. இதுகுறித்து கேட்டால், டிரான்ஸ்பார்மர் கையிருப்பில் இல்லை என்றும், வந்ததும் இணைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கின்றனர். இதேபோல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

இதுகுறித்து பல்லடம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கூறுகையில், ‘விண்ணப்பங்கள் வரிசைப்படி பரிசீலிக்கப்பட்டு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமான இணைப்புகளுக்கு 3 மாதங்களுக்குள் டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே கொள்முதல் ஆர்டர் வழங்கப்பட்ட டிரான்ஸ்பார்மர்களே இன்னும் வந்து சேரவில்லை. அவை வந்ததும் மின் இணைப்புகள் வழங்கப்படும்’ என்றார்.

Advertisement