ஜோஹனஸ்பர்க் அணியில் போலார்டு
ஜோஹனஸ்பர்க்: 'எஸ்.ஏ.20' தொடருக்கான ஜோஹனஸ்பர்க் அணியில் போலார்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்ரிக்காவில், 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் 5வது சீசன் (2027, ஜன. 17 - பிப். 21) நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம், ஜோஹனஸ்பர்க்கில் நடந்தது. இதில் இடம் பெற்றுள்ள ஜோஹனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில், வெஸ்ட் இண்டீஸ் 'ஆல்-ரவுண்டர்' போலார்டு ரூ. 87 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் லீக் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய போலார்டு 39, இதுவரை 754 'டி-20' போட்டிகளில் (14,999 ரன், 341 விக்கெட்) பங்கேற்றுள்ளார்.
கடந்த 2010ல் நடந்த பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் போலார்டை வாங்க பெங்களூரு, சென்னை, கொல்கட்டா, மும்பை அணிகள் போட்டியிட்டன. முடிவில் 'டை பிரேக்கர்' முறையில் மும்பை அணி ரூ. 3.41 கோடிக்கு போலார்டை ஒப்பந்தம் செய்தது. அப்போது போலார்டை வாங்க முடியாத சென்னை அணி நிர்வாகம், 16 ஆண்களுக்க பின் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே இந்த அணியில் வெஸ்ட் இண்டீசின் ஜேசன் ஹோல்டர் இடம் பெற்றுள்ளார்.
தென் ஆப்ரிக்காவின் டுபிளசி (ரூ. 1.56 கோடி), 18 வயதான தென் ஆப்ரிக்க 'ஆல்-ரவுண்டர்' ஜேசன் ரோல்ஸ் (ரூ. 1.69 கோடி), ஜிம்பாப்வேயின் முசராபானி (ரூ. 30 லட்சம்) உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகினர்.