பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி ‘ரெய்டு’

சண்டிகர்: பஞ்சாப் உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து முதல்வர் பகவந்த் சிங் மானின் சிறப்பு பணி அதிகாரி தொடர்பான ஊழல் வழக்கில், அவரது முகாம் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான கூட்டணி பேச்சுக்களில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தின் சிறப்பு அதிகாரி ராஸ்பிர் சிங் குமான், அரசு அதிகாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் உதவியுடன் அரசு பணியிட மாற்றங்கள், டெண்டர்கள் மற்றும் கொள்கை முடிவுகளில் முறைகேடு செய்து லஞ்சம் பெற்றதாக பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடுத்தது.

விசாரணை மேற்கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து, பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதற்கிடையே, இவ்வழக்கு தொடர்பாக சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் முகாம் அலுவலகம், சிறப்பு அதிகாரி ராஸ்பிர் சிங் குமானின் சொந்த ஊரான கராச்சோன் பகுதியில் உள்ள அவரது வீடு, மொஹாலியில் உள்ள அவரது உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ராஸ்பிர் சிங் குமான், மூத்த அரசு அதிகாரிகள் உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த ரெய்டு குறித்து சமூக ஊடகத்தில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் கூறுகையில், ‘பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு அஞ்சி அரசு இயந்திரங்களை பா.ஜ., தவறாகப் பயன்படுத்தி எங்களை முடக்கப் பார்க்கிறது’ என, குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், இந்த சிபிஐ விசாரணை உத்தரவை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Advertisement