நீட் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறை நிபுணர் குழு அறிக்கை தயாரிக்க கூடுதல் அவகாசம்
-–சிறப்பு நிருபர்–
‘நீட்’ முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை முழுதாக ஆய்வு செய்து நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு, மேலும் மூன்று வார காலம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., – எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையும் ‘நீட்’ நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்படுகிறது. இந்நிலையில் நாடு முழுதும் காலியாக உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப, தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் பொது பிரிவினர் மற்றும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண்களை குறைத்தது.
முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்களை கடுமையாக குறைப்பதால், தகுதியற்றவர்களுக்கும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘நீட் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை முழுதாக ஆய்வு செய்து சீரமைக்க, சுகாதார பணிகள் தலைமை இயக்குநர் தலைமையில், 12 உறுப்பினர்கள் கொண்ட உயர் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது’ என மத்திய அரசு தெரிவித்தது. இதை பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் நிபுணர் குழு, அறிக்கை தாக்கல் செய்வதற்கு எட்டு வார காலம் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அர்ச்சனா தவே பதக், ‘‘நீட் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை மிக நுணக்கமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க, நிபுணர் குழுவுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது,’’ என, தெரிவித்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சத்யம் ராஜ்புத், ‘‘நீட் முதுநிலை தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வும் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில், நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு கூடுதலாக அவகாசம் கோரினால், மாணவர்களிடையே பெரும் குழப்பம் ஏற்படும்,’’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை ஆய்வு செய்யும் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் மிகவும் முக்கியமானவை. எனவே, நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்ய கூடுதலாக மூன்று வாரங்கள் அவகாசம் வழங்கப்படுகிறது’ என கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.