அரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இரவிலும் தொடர்ந்த கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம்

அரூர்: அரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தி.மு.க., –- அ.தி.மு.க., -– பா.ம.க., கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் தொடர்ந்தது.

தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த இந்திராணி தலைவராகவும், அவரது கணவர் தனபால் துணைத்தலைவராகவும் உள்ளனர். நகராட்சியில் மொத்தமுள்ள, 18 வார்டுகளில், அ.தி.மு.க., –- 7, தி.மு.க., -– 7, பா.ம.க., -–- 2, சுயேச்சை -–- 2, என, கவுன்சிலர்கள் உள்ளனர். அரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு, தி.மு.க., -–- அ.தி.மு.க.,-– - பா.ம.க., மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் உள்ளிட்ட, 12 பேர், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு, 8:45 மணிக்கு மேலாகியும் கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது.

இது குறித்து, கவுன்சிலர்கள் கூறியதாவது:

அரூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தெருவிளக்கு பழுது பார்த்தல், குடிநீர் பிரச்னை சரிசெய்தல் உள்ளிட்ட எவ்வித பணிகளும் நடக்கவில்லை. கவுன்சிலர்களை, கமிஷனர் மதிப்பதில்லை. அவரை இடமாற்றம் செய்ய வேண்டும். அரூர் நகராட்சியில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது. டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடக்கிறது. நகராட்சி மாதாந்திர கூட்டங்களில் நிறைவேற்றிய தீர்மான நகல்களை தர வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில், தணிக்கை செய்த வரவு, செலவு கணக்கு குறித்த அறிக்கை நகல் வழங்க வேண்டும். கலெக்டர், மண்டல இயக்குனருக்கு அனுப்பிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட தினசரி நடவடிக்கை குறித்து அறிக்கை வழங்க வேண்டும். வார்டு வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, அது குறித்து வரவு, செலவு அறிக்கை வழங்க வேண்டும். மாநில தணிக்கை குழு மூலம் அவசரகால தணிக்கை செய்ய வேண்டும். நகராட்சி கமிஷனர் மீது அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத மண்டல அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி செய்து தர வேண்டும். அரூர் நகராட்சியில், ‘எல்நினோ’ பாதிப்பை தடுக்க, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இது குறித்து, நகராட்சி கமிஷனர் விஜயாஸ்ரீ கூறுகையில், ‘‘நகராட்சிக்கு ஒதுக்கிய நிதியில், 10 போர்வெல் போடப்பட்டுள்ளது. மின்மோட்டார்கள் மாற்றப்பட்டுள்ளன. தற்போதுதான், சாலைப் பணிக்கு, 2 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட மதிப்பீடு கேட்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். அவர்கள் கூறும் புகார்கள் அனைத்தும் தவறானது,’’ என்றார்.

Advertisement