அமைதியாக முடிந்த தாராபுரம் இடைத்தேர்தல்
தாராபுரம்:தாராபுரம்
தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. ஒரு சில
இடங்களில் வாக்குவாதம் நடந்தாலும் அமைதியாகவே முடிந்தது.
தாராபுரம்
தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற
சத்தியபாமா, ராஜினாமா செய்து த.வெ.க.,வுக்கு தாவியதால் இடைத்தேர்தல்
நேற்று நடந்தது. தவெக சார்பில் சத்தியபாமா, அ.தி.மு.க., சார்பில்
பானுமதி, தி.மு.க., சார்பில் சுகன்யா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
காலை,
7:00 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, 9:00 மணிக்கு, 17.55
சதவிகிதத்தை எட்டியது. 11:00 மணியளவில், 37.28 சதவீதம்; 1:00
மணிக்கு, 56.09 சதவீதத்தை அடைந்தது. மாலை, 5:00 மணிக்கு, 78.53
சதவீதம், 6:00 மணிக்கு, 80.34 சதவீதமாக உயர்ந்தது.
ஓட்டளித்த வேட்பாளர்கள்
தி.மு.க.,
வழக்கறிஞர் சுகன்யா, தளவாய்பட்டினம் அரசுப்பள்ளியில் பதிவு
செய்தார். அ.தி.மு.க., வேட்பாளர் பானுமதி, வீராட்சிமங்கலம்
அரசுப்பள்ளியிலும், த.வெ.க., வேட்பாளர் சத்தியபாமா,
மதுக்கம்பாளையம் அரசுப்பள்ளியில் ஓட்டளித்தனர்.
தடைபட்ட ஓட்டுப்பதிவு
நஞ்சைத்தலையூர்,
புஞ்சைத்தலையூர் பகுதி ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு
கேமராக்கள் இயங்கவில்லை என்ற புகார் எழுந்தது. குண்டடம், மருதுாரில்
இயந்திர கோளாறு காரணமாக, ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது.
பாதுகாப்பில் 3,200 போலீசார்
தாராபுரம்
தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கி
மாலை, 6:00 மணி வரை நடந்தது. தொகுதியில், 186 ஓட்டுச்சாவடி மையங்களில், 320
பூத்களில் வாக்காளர்கள் ஓட்டளித்தனர்.
அனைத்து பூத்களிலும் போலீசார்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பூர் எஸ்.பி., சிருஷ்டி சிங்
தலைமையில் மூன்று ஏ.டி.எஸ்.பி.க்கள்., ஏழு டி.எஸ்.பி.,கள் உள்பட 3,200
போலீசார், நுாற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர், பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர்.