சாலையோரம் சென்ற பச்சோந்தி நிறம் மாறுவதை கண்டு வியந்த மக்கள்

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் சாலையோரம் தனது நிறங்களை மாற்றியபடி சென்ற பச்சோந்தியை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்தனர்.

லாஸ்பேட்டை, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அருகே நேற்று மதியம் 12:00 மணிக்கு பெரிய மரத்திலிருந்து, வண்ணங்களை மாற்றி தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்ட பெரிய பச்சோந்தி ஒன்று சாலையில் விழுந்தது.

இதனை அங்கு துாய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு, கீழே விழுந்து சாலையோரம் மதில்சுவர் ஓட்டி நடந்து சென்ற பச்சோந்தியை வியப்பாக பார்த்தனர்.

மரத்தில் இருந்து கீழே விழுந்ததால், சோர்வடைந்த பச்சோந்தி மதில்சுவர் மீது ஏற முடியாமல் நீண்ட நேரமாக சாலையோரம் மெதுவாக நகர்ந்து சென்ற அழகையும், நகர்தலுக்கு ஏற்றவாறு தனது நிறங்களை மாற்றி கொள்ளும் தன்மையையும் அவ்வழியாக சென்ற மக்கள் கண்டு வியப்படைந்தனர்.

இதனை அங்கிருந்த சிலர் தங்களது மொபைலில் வீடியோ எடுத்தும் கொண்டனர். பின் பச்சோந்தி அருகில் இருந்த பாதுகாப்பான மரப் பகுதிக்குச் சென்று மறைந்தது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement