6574 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., புதிய விதிமுறைகள் இதோ!

-நமது நிருபர்-

தமிழக அரசு, குரூப் 4 நிலையிலான 6574 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம் ஆட்தேர்வு செய்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு நேற்று (அக்.,6) தொடங்கியுள்ளது.

இணையவழி விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள்: நவ.,5ம் தேதி

விண்ணப்பத்தை திருத்த வாய்ப்பு: நவ.,11 வரை

தேர்வு நாள்: 2027 ஜன.,10

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், ஆய்வக உதவியாளர், விற்பனை உதவியாளர், அறநிலையத்துறை செயல் அலுவலர், நேர்முக எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்த ஆட்தேர்வு நடக்கிறது.

* ஒவ்வொரு துறை தொடர்பான பணிக்கும், ஒவ்வொரு விதமான கல்வித்தகுதி உண்டு. தட்டச்சர் (டைப்பிஸ்ட்) பணிக்கு தட்டச்சு தேர்வில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

* பட்டப்படிப்பு கல்வித்தகுதி இருந்தால், அதை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்ற வரிசையில் பெற்றிருக்கவேண்டும்.

* எழுத்துத்தேர்வில் தேர்வர்கள் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தகுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.

* தொழில்நுட்ப தகுதியான தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றுக்கு, அதிகபட்ச தொழில்நுட்ப தகுதி பெற்ற தேர்வர்கள் முதலிடத்தில் வைக்கப்படுவர்.

* எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் தகுதியும் ஒரே மாதிரியாக இருப்பின், வயதில் மூத்த தேர்வர் பட்டியலில் முதலிடத்தில் வைக்கப்படுவார்.

* ஒவ்வொரு பதவிக்கும் இட ஒதுக்கீடு நியமன விதிகள் தனித்தனியே பின்பற்றப்படும்.

* விண்ணப்பதாரர்கள், தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட அன்றோ, அதற்கு பிறகோ எடுக்கப்பட்ட படத்தை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

* படத்தின் கீழே தேர்வரின் பெயர் மற்றும் படம் எடுக்கப்பட்ட தேதி தெரியுமாறு அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

* அதே புகைப்படத்தை, டிஜிட்டல் வடிவத்தில் சேமித்து வைத்திருக்கவும் வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முழுமையான விதிமுறைகளை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Advertisement