கொலை முயற்சி வழக்கில்தொழில்அதிபருக்கு சிறை

கோவை: சேலம், கோனார் பட்டி, காட்டு கோட்டையை சேர்ந்தவர் சந்திரன்,45. கோவை, சின்னியம்பாளையத்தில், மரம் அறுக்கும் மிஷின் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். சென்னையில், 2017 ம் ஆண்டு நடந்த இயந்திர கண்காட்சியில் சந்திரன் ஸ்டால் அமைத்து இருந்தார்.

அப்போது, சென்னை, ஐயம்பாக்கத்தை சேர்ந்த சிவகுமார்,48, என்பவர் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரம் வாங்க ஆர்டர் கொடுத்தார். முன்பணமாக 4.5 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் பல மாதங்களாகியும் சந்திரன் இயந்திரத்தை சப்ளை செய்யவில்லை.

கடந்த 2017, நவ., 22 ல் கோவைக்கு வந்து சந்திரனை சந்தித்து பணத்தை திருப்பி கேட்டார். பணம் தருவதாக கூறி, சிவகுமாரை பைக்கில் காட்டிற்குள் அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். அவரிடமிருந்து தப்பிய சிவகுமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் சந்திரனை கைது செய்தனர். கோவை முதலாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடந்தது. விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்ட சந்திரனுக்கு, 5 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கோவிந்தராஜ் ஆஜரானார்.

Advertisement