25 ஆண்டுகளாக பதவியில் நீடிக்க மக்களின் ஆசியே காரணம்; பிரதமர் மோடி பெருமிதம்

3

புதுடில்லி: 25 ஆண்டுகளாக பதவியில் நீடிக்க மக்களின் ஆசியே காரணம்; இன்று நான் இருக்கும் இடத்திற்கும், வகிக்கும் பதவிக்கும் மக்களின் பங்களிப்பே மிக முக்கியமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: 2001ல் இதே நாளில் குஜராத் முதல்வராக நான் பதவியேற்றபோது, இந்த உயரத்துக்கு வருவேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை; 25 ஆண்டுகளாக பதவியில் நீடிக்க மக்களின் ஆசியே காரணம். இன்று நான் இருக்கும் இடத்திற்கும், வகிக்கும் பதவிக்கும் மக்களின் பங்களிப்பே மிக முக்கியமானது. இன்று வெறும் நினைவுகளுக்கான நாள் மட்டுமல்ல. நமது உறுதிப்பாட்டிற்குப் புதிய ஆற்றலை ஊட்டும் நாள் இது. இந்தியாவைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லத் தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மீண்டும்...மீண்டும்...

ஜனநாயகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் நடைபெற்றன; மக்கள் எனக்குச் சேவை செய்யும் வாய்ப்பை மீண்டும் மீண்டும் வழங்கினர். இன்று, இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் அதன் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எனது ஆழ்ந்த மரியாதையைச் செலுத்துகிறேன்.

இன்று காலை, நான் விநாயகர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தேன். நமது நாட்டிற்காகவும், 140 கோடி இந்தியர்களுக்காகவும், எனக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன். அதிக ஆற்றலுடன் நாட்டிற்காக உழைக்கவும், மக்களுக்குச் சேவை செய்யவும் தேவையான வலிமையையும் திறனையும் இறைவன் எனக்கு அருள வேண்டும் என்பதே எனது பிரார்த்தனையாக இருந்தது.


பெரிய பலம்

என்னைப் பொறுத்தவரை, மக்களே கடவுளின் வடிவமாகத் திகழ்கிறார்கள். கோடிக்கணக்கான நாட்டு மக்களின் நம்பிக்கையும், லட்சக்கணக்கான கட்சித் தொண்டர்களின் அயராத உழைப்புமே எனது மிகப்பெரிய பலமாக இருந்து வருகின்றன.என் மீது நம்பிக்கை வைத்ததற்காக இந்திய மக்கள் முன் தலைவணங்குகிறேன். அரசியல் ஆதாயத்திற்காகச் சமூகம் ஓட்டு வங்கி அடிப்படையில் பிளவுபடுத்தப்பட்டது நமது நாடு சந்தித்த மிகப்பெரிய துயரங்களில் ஒன்றாகும். இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்.



பெரிய சொத்து



தகுதியுள்ள ஒவ்வொரு பயனாளியும் அரசின் திட்டத்தின் கீழ் பயன் அடைய வேண்டும்; தகுதியான எவரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எனக்குத் துணையாக நின்றவர்கள் நம்பிக்கையின் சக்தியை எனக்குக் காட்டினர்; என்னை எதிர்த்தவர்கள் ஜனநாயகத்தின் சக்தியை எனக்குக் கற்றுக்கொடுத்தனர்.

நான் ஒருபோதும் தனிமையாக உணர்ந்ததில்லை; இந்தியாவின் கலாசார ஆன்மாவைக் காக்கும் எண்ணற்ற தன்னார்வலர்கள் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகால மக்கள் நம்பிக்கையும் அனுபவமும் ஒரு மிகப்பெரிய சொத்து. இந்தச் சொத்து மோடிக்கு மட்டும் சொந்தமானது அல்ல; இது நாட்டிற்குச் சொந்தமானது. வரும் காலங்களில் இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன்.


இளமை பருவம்

வத்நகரில் நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ​​எங்கள் ஆசிரியர் பல்வேறு பாடங்களைக் கற்றுக்கொடுப்பார்; அப்போது வகுப்பறைக்கு முதலில் வந்து சேரும் மாணவர்களில் என் பெயரும் எப்போதும் இடம்பெற்றிருக்கும் என்பது எனக்கு நினைவிருக்கிறது. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அந்த ஆர்வம் என் வாழ்வின்

முக்கிய அங்கமாகிவிட்டது; இன்றும் கூட, நான் என்னை வாழ்நாள் முழுவதும் கற்கும் ஒரு மாணவனாகவே கருதுகிறேன். ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொள்ள நான் முயற்சிக்கிறேன். நான் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறேனோ, அந்தளவுக்கு நாட்டிற்குப் பங்களிக்கும் எனது திறனும் வளரும்.



உலகமே பேசுகிறது



தீரம்மிக்க நமது விமானி ஸ்மித் மச்சார் பற்றி இன்று உலகமே பேசுகிறது; இந்தியாவின் திறன் என்ன என்பதை இன்று உலகமே பேசுகிறது. இந்தியாவில் தயாரான விமானம் குறித்து விரைவில் உலகம் பேசும். விரைவில் விமானம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்தியாவின் பெருமையை மீட்டெடுத்துள்ளோம். நமது நாட்டுக்கான பெரிய இலக்குகளை தீர்மானிக்கும் நேரம் இது. 2047ல் இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்குவதற்கு உறுதி ஏற்போம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement