துாய்மை பணியாளர்கள் தொடர் ஸ்டிரைக்: மூன்று நாட்களாக குப்பை வாங்காததால்பாதிப்பு

சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் மூன்று நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் நகரில் குப்பை அள்ளப்படாமல் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஒப்பந்த பணியாளர்களை பணிக்கு வருமாறு கவுன்சிலர்கள் அழைத்ததால் பணியாளர்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிவகங்கை நகராட்சி துாய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் துாய்மை பணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிரந்தர பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நகராட்சியில் 5ஆண்டுகளுக்கும் மேல் பணி புரியும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிவகங்கையில் ஒப்பந்த துாய்மை பணியாளர்களை பயன்படுத்தி வாரச்சந்தையை சுத்தம் செய்வதை நிறுத்த வேண்டும். துாய்மை பணியாளர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் நகராட்சியில் பணிபுரியும் 60 நிரந்தர பணியாளர்கள், 104 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று நாட்களாக சிவகங்கை நகராட்சியில் துாய்மை பணி பாதிக்கப்பட்டுள்ளது. நகரில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் குப்பை வாங்கப்படவில்லை. பொதுமக்கள் வீடுகளிலுள்ள குப்பையை ரோட்டோரங்களில் கொட்டுகின்றனர். இதனால் நகரில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

நேற்று சிவகங்கை தனியார் மண்டபத்தில் துாய்மை பணியாளர்கள் சி.ஐ.டி.யூ., வீரையா தலைமையில் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது ஒப்பந்த பணியாளர்களை பணிக்கு திரும்பக்கோரி நகராட்சி கவுன்சிலர்கள் அங்கு சென்று அழைத்தனர். கவுன்சிலர்களும் துாய்மை பணியாளர்களும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பணியாளர் அதை வீடியோ எடுத்துள்ளார். அதனால் கவுன்சிலருக்கும் பணியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நகர் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். துாய்மை பணியாளர்கள் இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. சி.ஐ.டி.யூ., மாநிலத்தலைவர்கள் முதல்வரை சந்திக்க உள்ளனர். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின் மாநில மையத்தின் முடிவின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்படும் என்றனர்.

Advertisement