ஒவ்வொரு எப்ஐஆரும் எனக்கு ஒரு பதக்கம்; இப்போது என்னிடம் 45 இருக்கு; இலக்கு 100 என்கிறார் ராகுல்!

46

புதுடில்லி: ஒவ்வொரு எப்ஐஆரும் எனக்கு ஒரு பதக்கம்; இப்போது என்னிடம் 45 வழக்குகள் உள்ளன; எனக்கு எதிராக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் தெரிவித்துள்ளார்.

டில்லியில் போராட்டத்தின் போது அனுமதியின்றி ஆகாஷ்வாணி பவன் வளாகத்துக்குள் நுழைந்த, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பிரியங்கா மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து நிருபர்களிடம் ராகுல் கூறியதாவது: எனக்கு எதிராக 45 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

எனக்கு எதிராக 100 வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒவ்வொரு வழக்கும் எனக்கு ஒரு பதக்கத்தைப் போன்றது. எம்பிக்களாகிய நாங்கள் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் உட்பட 3 தேர்தல் கமிஷனர்களையும் சந்திக்க விரும்பினோம். அவர்கள் எங்களைச் சந்திக்க மறுத்துவிட்டனர். டில்லி போலீசார் எங்களைத் தடுத்து நிறுத்தி, அங்குப் போராட்டம் நடத்த முடியாது என்று கூறிவிட்டனர்.

இன்று, போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடமான ஜந்தர் மந்தருக்குச் சென்று, அங்கு அமர்ந்து, ஞானேஷ் குமார் இந்த நாட்டின் முறையான தேர்தல் கமிஷனர் அல்ல என்பதை நாட்டுக்கு அறிவிக்கத் திட்டமிட்டுள்ளோம். நான் இப்போதே சொல்கிறேன். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆக வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.

Advertisement