மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு

சென்னை: ''தமிழகத்தில், காற்றாலை திட்டங்களுக்கான மின் இணைப்புகளை, துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புடன் இணைப்பதற்கான அனுமதி வழங்குவதில் உள்ள சிக்கல்களை, தமிழக அரசு தீர்க்க வேண்டும்,'' என, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

இந்திய காற்றாலை மின் சாதன உற்பத்தியாளர்கள் சங்கம், மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை மற்றும் மத்திய மின்துறை ஆகியவை இணைந்து, 'விண்டர்ஜி இந்தியா 2026' என்ற சர்வதேச காற்றாலை மின்சார மாநாடு மற்றும் கண்காட்சியை, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தின. இதில், 25 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்; காற்றாலை மின் சாதனங்கள் தொடர்பாக, 373 கண்காட்சி அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

மாநாட்டில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், காற்றாலை மின்சாதன உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், காற்றாலை மின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய, குஜராத், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்களின் மின்துறைக்கு விருதுகளை, பிரகலாத் ஜோஷி வழங்கினார். அவர் பேசியதாவது:

பொருளாதாரம் வளர்ச்சி அடையும் போது, மின்சாரத்திற்கான தேவையும் வேகமாக அதிகரிக்கிறது. கடந்த மே மாதம் நாட்டின் உச்ச மின் தேவை, 271 ஜிகாவாட்டை எட்டியது. கடந்த, 2012ல் உச்ச மின் தேவை, 123 ஜிகா வாட்டை தாண்டிய போது, வடமாநிலங்களின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இன்று, இந்தியா உச்ச மின் தேவையை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறது.

மத்திய அரசு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குகிறது. காற்றாலை திட்டங்களுக்கான மின் இணைப்புகளை, துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புடன் இணைப்பதற்கான அனுமதிகளை வழங்குவதில் உள்ள சிக்கல்களை, தமிழக அரசு தீர்க்க வேண்டும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாக, சில நிர்வாக சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அதற்கு பின்னால், சில நியாயமான காரணங்களும் இருக்கக்கூடும். இருப்பினும், தற்போதைய அரசு, இந்த விவகாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடித்து, திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

பசுமை மின் வழித்தட திட்டங்களுக்கு மத்திய அரசு, 54 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பழைய காற்றாலைகளை மறுசீரமைப்பதில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். குஜராத், தமிழகத்தில் தலா, 500 மெகா வாட் திறனில், கடலில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மின் பரிமாற்ற செலவு யூனிட், 5 ரூபாயாக இருப்பது முக்கிய சவாலாக உள்ளது.

இதற்கு தமிழக அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததும், 'டெண்டர்' பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement