சீர்மரபினர் வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
திருப்பூர்: சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. விபத்து ஈட்டுறுதி திட்டத்தில் ரூ.1.25 லட்சம், இயற்கை மரணத்துக்கு ரூ.30 ஆயிரம், ஈமச்சடங்குக்கு ரூ.5 ஆயிரம், கல்வி உதவித்தொகை ரூ.1,000 முதல் ரூ.8 ஆயிரம் வரை, திருமண உதவித்தொகை ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை, மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம், மூக்குக் கண்ணாடிக்கு ரூ.750, முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூ.1,200 வழங்கப்படுகிறது.
18 முதல் 60 வயதுக்குட்பட்ட சீர்மரபினர், அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் என்ற அடிப்படையில் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, உதவிகளைப் பெறலாம்.
உறுப்பினர் பதிவு, புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு www.dncwb.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால், உறுப்பினர் அடையாள அட்டை நகல், ஆதார் நகல், மொபைல் எண் ஆகியவற்றை கலெக்டர் அலுவலக வளாக முதல் தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.