ஓட்டு பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு: சீனியர் எஸ்.பி., கலைவாணன் தகவல்
புதுச்சேரி: ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சீனியர் எஸ்.பி., கலைவாணன் தெரிவித்தார்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்ட பின், சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறியதாவது:
தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு, ஓட்டு எண்ணும் மையத்தின் ஸ்ட்ராங் ரூமில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
துணை ராணுவப்படை, இந்திய காப்பு படை, உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை 24 மணி நேரமும், எஸ்.பி., நிலையிலான உயர் அதிகாரி தலைமையில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தேர்தல் நாளில் கட்சி சின்னம் பொறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிப்படை அமைத்து, அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.