குஞ்சிபாளையம் மயானத்தில் சப் - கலெக்டர் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட ஜமீன் ஊத்துக்குளி, சீனிவாசபுரம், வசியாபுரம், காளிபாளையம், காந்தி நகர், நல்லுார், நஞ்சேகவுண்டன்புதுார், செல்லமுத்துார் நகர், காளிங்கராயன் நகர், குஞ்சிபாளையம் பகுதிகளில் இருந்து குப்பை, பாலிதீன் கவர்கள், மருத்துவ, இறைச்சி கழிவுகள், காய்கறி கழிவுகளை, வாகனங்களில் கொண்டு வந்து குஞ்சிபாளையம் மயானத்தில் கொட்டுகிறது.

மேலும், மயானத்தில் 96 சென்ட் இடத்தில், பேரூராட்சி சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், குஞ்சிபாளையம் வழியாக கழிவுநீர் கொண்டு செல்வதற்கும், மயானத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், குப்பை குவிப்பதை எதிர்த்தும், அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சமரச பேச்சையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி, குஞ்சிபாளையம் மயானத்தில் ஆய்வு செய்தார். அங்கு வந்த பொதுமக்கள், 'சுத்திகரிப்பு நிலைய பணிகளை நிறுத்த வேண்டும். குப்பைகளை அகற்றி, பொதுமக்களிடம் மயானத்தை ஒப்படைக்க வேண்டும்,' என்றனர்.

பதில் அளித்த சப் - கலெக்டர், ''ஜமீன் ஊத்துக்குளியில் ஆய்வு செய்த போது, எங்கேயும் இடமில்லை; இங்கு மட்டும் தான் உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்ட அறிக்கை அனுப்பப்பட்டு, அரசாணை பெறப்பட்டது. மயானத்தை மறித்து தனிநபர் வழித்தடம் அமைத்ததை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மின் இணைப்பு கிடைத்ததும், குப்பை அகற்றப்படும்,'' என்றார்.

Advertisement