கருங்கடலில் உக்ரைன் தாக்குதல் பற்றி எரிந்த எண்ணெய் கப்பல்

1

மாஸ்கோ: ரஷ்ய கருங்கடல் பகுதியில், உக்ரைன் கடற்படை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில், எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்தது. துரிதகதியில் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையால், கப்பலில் இருந்த, 23 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ரஷ்யாவின் தெற்கு கடற்கரையில் உள்ள சுற்றுலா நகரமான சோச்சி அருகே கருங்கடலில் மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியா கொடியுடன் எண்ணெய் கப்பல் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த கப்பல் மீது கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் கடற்படையினர் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தினர். இதில், கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கச்சா எண்ணெய் முழுதும் தீப்பற்றி எரிந்ததால், வானுயர கரும்புகை எழுந்து அப்பகுதியே புகைமண்டலமானது. உடனடியாக மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதால், கப்பலில் இருந்த, 23 இந்திய மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, சோச்சி மற்றும் அதை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதால், அதற்குப் பதிலடியாக ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் தாக்கி வருகிறது.

Advertisement