வி.ஏ.ஓ., அலுவலகங்களில் 'பயோமெட்ரிக்' வருகை பதிவு

1

சென்னை : 'தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, 'பயோமெட்ரிக்' முறையில், வருகைப் பதிவேடு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், வருவாய் துறை தொடர்பான எந்த பணியானாலும், மக்கள் முதலில் கிராம நிர்வாக அலுவலர்களை நாடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, தனி அலுவலகம் உள்ளது. ஆனால், அங்கு மக்கள் சென்றால், கிராம நிர்வாக அலுவலர்கள் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் அலுவலகத்தில், வேலை நேரத்தில் இருக்க, மேலதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நாட்களில், தினசரி காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை இருப்பது கட்டாயம். இதை துல்லியமாக உறுதி செய்ய, ஒவ்வொரு அலுவலகத்திலும், 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்த, ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அலுவலகங்களில், இதற்கான கருவிகளை அமைக்க, நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement