வார்ப்பு 4.0 தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் 300 மடங்கு வளர்ச்சி
உலகம் முழுவதும் வார்ப்பு இரும்புக்கான தேவை அதிகம் உள்ளது. இந்தியாவில் 5,000க்கும் மேற்பட்ட வார்ப்பு நிறுவனங்கள் உள்ளன. உலகளவு வார்ப்பு உற்பத்தியில் ஆண்டுக்கு 55 மில்லியன் டன்னுடன் சீனா முதல் இடத்திலும், 15 மில்லியன் டன்னுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. போர் பதற்றம், உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பியா நாடுகளில் உள்ள வார்ப்பு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்கு அதிக ஆர்டர் வர துவங்கியுள்ளது. வார்ப்பு நிறுவனங்கள் தொழில்நுட்பரீதியாக அப்டேட்டாக வேண்டும்.
இந்திய பவுண்டரிமேன் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயகுமார் ராமதாஸ் கூறியதாவது:
சீனாவில் 100 பேர் பணியாற்றும் வார்ப்பு நிறுவனத்தில் 20,000 டன் உற்பத்தி எடுப்பார்கள். அதுவே இந்தியாவில் 100 பேர் பணியாற்றும் வார்ப்பு நிறுவனத்தில் 400 டன் உற்பத்தி எடுக்கிறோம். வார்ப்பு நிறுவனங்களில் நவீன தொழில்நுட்பம் என்பது காலத்தின் கட்டாயம். வார்ப்பு 4.0 என்கிற முன்னெடுப்பை எடுத்துள்ளோம். மின் கட்டண உயர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறை, வாடிக்கையாளரின் தேவை ஆகியவற்றை நிறைவேற்ற தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது அவசியம். வடிவமைப்பில் டிஜிட்டல் மயமாக்கல் செய்ய வேண்டும். வாடிக்கையாளர் கொடுக்கும் ஒரு பாகத்தை சாப்ட்வேர் மூலம் மெருகேற்றலாம். மெட்டல் ஊற்றினால் எந்தளவுக்கு பாயும், எங்கு எல்லாம் பிரச்னை வரும் என்பதை அறிந்து தரமாக தயாரிக்க வேண்டும். இதற்கு 'காஸ்டிங் சிமிலேஷன் சாப்ட்வேர்' உள்ளது.
உருகுதலை ஒவ்வொரு நிலையிலும் கண்காணிக்க வேண்டும். அதற்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தில் 'ரியல் டைம் தெர்மல் இமேஜ்' உள்ளது. அந்தந்த நிலையிலேயே தரத்தை பார்க்க முடியும். 'கார்பன்', 'சிலிகான்' அளவை பரிசோதிக்க முடியும். வெப்பநிலையை சரியாக கடைபிடிப்பதற்கு ஏ.ஐ தொழில்நுட்பம் பயன்படும். மோல்டிங் இயந்திரத்தை பரிசோதிக்கவும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இயந்திரம் இயங்கும்போதே மண் மூலம் சரியாக மோல்டிங் செய்ய இது உதவும். டிசைனிங், ப்ராசஸிங் எல்லாவற்றுக்கும் இது கைக்கொடுக்கும். '3 டி ஹேண்ட் பிரின்டிங்' வசதி உள்ளது. உதிரிபாகங்களை குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனை செய்ய முடியும். நமக்கு என்ன மாதிரியான வடிவத்தில் வேண்டுமோ அதை அப்படியே கொடுக்கும். இதன்மூலம் நமக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம். பொருட்களை நேரடியாக தயாரித்து வீணாவதை தடுக்க முடியும்.
அதிவேக மோல்டிங் இயந்திரங்கள் வந்துவிட்டன. ஒரு மணி நேரத்தில் 170 பெட்டிகளை அடிக்கலாம். மண்ணை வெளியில் கொட்டாமல் மறுசுழற்சி செய்ய அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது. மற்ற வார்ப்பு நிறுவனங்களிடம் மண்ணை வாங்கி மறுசுழற்சி செய்து, மீண்டும் வார்ப்பு நிறுவனங்களுக்கே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். வார்ப்பு நிறுவனங்கள் 'மெல்டிங்', 'ஹோல்டிங்' தனியாக செய்கிறார்கள். மெல்டிங், ஹோல்டிங் இணைந்து செய்வதற்கான தொழில்நுட்பம் வந்துவிட்டது. இதில் மின்சாரமும் சிக்கனமாக பயன்படுத்தப்படும். காஸ்டிங்கை மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம். சராசரியாக ஒரு காஸ்டிங் ரூ.110க்கு விற்பனையாகிறது என்றால், ஸ்பெஷல் அலாய் காஸ்டிங் ரூ.250க்கு விற்பனை செய்யலாம்.
காஸ்டிங் ஊற்றிய பிறகு அதிகளவு தூசி படியும். அதை பளீச் சுத்தத்தில் பராமரிக்க ரோபோக்கள் இருக்கின்றன. மெட்டலை உருக்கி கையில் எடுத்து ஊற்றுகிறார்கள். ஆட்டோமெடிக் இயந்திரங்கள் வந்துவிட்டன. வார்ப்பு என்றாலே அசுத்தமான இடம் என்கிற பார்வை உண்டு. புகை, தூசி இல்லாமல் வார்ப்புகளை தூய்மையாக பராமரிக்க இயந்திரங்கள் உள்ளன. இவற்றை செயல்படுத்த செலவு அதிகமாகும். ஜவுளித்துறையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த அரசு உதவி செய்தது. அப்படி வார்ப்பு நிறுவனங்களுக்கும் உதவி செய்தால் எல்லா பிரச்னையும் சரியாகும்.
இன்றைக்கு 7 சதவீதம் வட்டியில் பைக் வாங்கலாம். இயந்திரத்துக்கு 14 சதவீதம் வட்டி கட்ட வேண்டியுள்ளது. அவ்வளவு கடன் செலுத்தி உற்பத்தி எடுக்க முடியாது. அரசு கைக்கொடுத்தால் குறு நிறுவனங்கள் துவங்கி பெரு நிறுவனங்கள் வரை பயன்பெற்று சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். தற்போது அமெரிக்கா, சீனா, ஐரோப்பியா நாடுகளில் இத்தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்தியாவிலும் ஆங்காங்கே பயன்படுத்த துவங்கியுள்ளனர். உலக நாடுகளில் இந்திய வார்ப்புகளை நோக்கி வருகிறார்கள். பிரச்னைகள் குறைய தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புள்ளது.
நாம் இதை சரியாக பயன்படுத்தாவிடின் அந்த வாய்ப்பு நம் கைவிட்டு போகும் அபாயம் உள்ளது. தொழில்நுட்பம் நமக்காக காத்திருக்காது. சீனாவில் தொழில் நிறுவனங்களுக்கு அரசு நிறைய உதவி செய்கிறது. ஏற்றுமதிக்கே அதிகளவு மானியங்களை கொடுக்கிறார்கள். அப்படி நாமும் மானிய திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும். ஏற்றுமதிக்கு முதலில் நம் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தேவைகள் அதிகம் உள்ளது. சரியாக பயன்படுத்தினால் இப்போதிருப்பதை விட 300 மடங்கு வளர்ச்சியை பெறுவோம். உலக நிறுவனங்கள் நாம் சொல்லும் விலைக்கு வாங்குவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
உலக சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் ராமநாதபுரம் கல்லுாரி பேராசிரியர்
-
மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்; மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு
-
காட்டுயானைகள் முகாம்
-
போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
-
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
-
குடிநீர் கேட்டு மறியல் முயற்சி