‘உடான்’ திட்ட விமானம் வரும் 16 முதல் நிறுத்தம்

ஓமலுார்: சேலம் விமான நிலையத்தில், 2023ல், மத்திய அரசின், ‘உடான்’ திட்டத்தில், குறைந்த கட்டணத்தில் பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின் பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டது. அது, 3 ஆண்டுக்கு மட்டும் என்பதால், நிறைவு பெற உள்ளது.

அதனால் சேலம் விமான நிலையத்தில் இருந்து, ‘அலையன்ஸ் ஏர்’ நிறுவனத்தால் இயக்கப்பட்ட, சேலம் – பெங்களூரு, சேலம் – கொச்சின் பயணியர் விமான சேவை, வரும், 16 முதல் நிறுத்தப்பட உள்ளது. ‘இண்டிகோ’ நிறுவனத்தால் இயக்கப்பட்ட, சேலம் – பெங்களூரு, சேலம் – ஹைதராபாத் பயணியர் விமான சேவை வரும், 24 முதல் நிறுத்தப்பட உள்ளது.

அதே நேரம், வரும், 25 முதல், ‘இண்டிகோ’ நிறுவனம், காலை, மாலையில், சேலம் – சென்னை இடையே விமான சேவையை இயக்க உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து மதியம், 12:10க்கு சேலம் வரும் விமானம், மீண்டும், 12:30க்கு சென்னை புறப்படும். மாலை, 4:50க்கு சேலம் வரும் விமானம், 5:10க்கு மீண்டும் சென்னை புறப்படும் என, சேலம் விமான நிலைய இயக்குனர் நவ்ஷாத் தெரிவித்தார்.

Advertisement