தென்காசி மாவட்ட கோவில்களில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு

– நமது நிருபர் –

தென்காசி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில் கல்வெட்டுகளை, மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில், தென்காசி, காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட பழமையான கோவில்கள் உள்ளன.

அவற்றில், கட்டுமானம், வழிபாட்டு செலவுகள் உள்ளிட்டவற்றுக்காக தானம் அளித்தோர் விபரங்கள், மன்னர்களின் உத்தரவுகள், சமூக நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல, இதுவரை தொல்லியல் துறையினரால் ஆராயப்படாமல் உள்ளன.

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறையினர், தென்காசி மாவட்டத்தில், 20 நாட்கள் கள ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கரிவலம்வந்தநல்லுாரில் உள்ள சிவன் கோவிலில் முதலில் ஆய்வு செய்கின்றனர். அதில் இதுவரை, மூன்று புதிய கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றில், 14 – 15ம் நுாற்றாண்டில், இப்பகுதியை ஆட்சி செய்த பாண்டியர்கள் காலத்தில், இக்கோவிலுக்கு வழங்கப்பட்ட நில தானம் பற்றிய தகவல் உள்ளது.

Advertisement