கேதாரகவுரி விரதம் நிறைவு: அர்த்தநாரீஸ்வரருக்கு பூஜை

திருச்செங்கோடு:திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில், சிவனும், பார்வதியும் ஒரே உருவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

பார்வதிதேவி, சிவபெருமானிடம் விரதம் இருந்து இடப்பாகம் பெற்றதாக ஐதீகம். இதற்கான கேதாரகவுரி விரத வழிபாட்டு விழா, புரட்டாசி சுக்ல நவமி முதல் புரட்டாசி கிருஷ்ண சதுர்த்தி வரையிலான, புரட்டாசி மஹாலயபட்ச அமாவாசைக்கு முனதினம், 21வது நாளாக வருமாறு கணக்கிட்டு பூஜை துவங்கி நடத்தபடுவது வழக்கம். 21 நாட்களும், 21 விதமான பட்சனங்கள் படையலிட்டு, பஞ்சாசனம் மற்றும் தபசு வழிபாட்டு முறையில் நிகழ்ச்சி நடத்தப்படும்.நேற்று, கேதாரகவுரி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. 21 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். 21வது நாளான மஹாளயபட்ச அமாவாசைக்கு முன்தினம் சர்வேஸ்வரன், அம்பாளுக்கு இடப்பாகம் வழங்கினார்.
இதையொட்டி, நேற்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இன்று சர்வேஸ்வரனாக அம்பாள் ஆவாகணம் செய்து சிறப்பு பூஜை செய்த கலசதீர்த்தம் பிரசித்தி பெற்ற வரலாற்று பெருமை கொண்ட கடலை தின்ற நந்தீஸ்வரருக்கு தீர்த்தாபிஷேகம் செய்யப்படும். திருமணத்தடை நீங்கவும், குடும்ப ஒற்றுமை மேம்படவும் கேதாரகவுரி விரத வழிபாட்டில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, அர்ச்சகர்கள் கூறுகையில், 'திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மட்டும் தான் புரட்டாசி மாத சதுர்த்தியன்று உத்தம கேதார கவுரி விரதம் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ண சதுர்த்தியன்று மத்திம கேதார கவுரி விரதம் அனைத்து பகுதிகளிலும் வழக்கமாக கொண்டாடுவார்கள்' என்றனர்.

Advertisement