டூவீலரை சாலையில் நிறுத்தி அடாவடி கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 'காப்பு'

நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சி, நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சஞ்சையா, 34. இவர் தனியார் பொறியியல் கல்லுாரியில் பேராசிரியர். கல்லுாரியில் பணி முடிந்து வீடு திரும்பிய மனைவியை, அழைத்துவர கணவர் சதீஷ்குமார் காரில் சென்றுள்ளார்.

ஒடுவன்குறிச்சி கிழங்கு மில் அருகே உள்ள பால் சொசைட்டி பகுதிக்கு சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற மன்னார், 25, தன் டூவீலரை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு மற்றொரு காரில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனால் கார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போது, காரில் இருந்து இறங்கிய சதீஷ்குமார், சாலையின் குறுக்கே நிறுத்தியிருந்த டூவீலரை எடுக்குமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த பைக் சாவியால் சதீஷ்குமாரின் நெற்றி, உதடு, வலது கண் மற்றும் தலை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். அதிர்ச்சியடைந்த மனைவி சஞ்சையா கணவரை காப்பாற்ற சண்டையை விலக்க முற்பட்டார். அப்போது மணிகண்டன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். படுகாயமடைந்த சதீஷ்குமார், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சஞ்சையா அளித்த புகார்படி, நாமகிரிப்பேட்டை எஸ்.ஐ., சிவா வழக்குப்பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement