வட மாநில தொழிலாளர்களுக்கு எளிதாக புரிய ஹிந்தியில் தகவல் தருவதில் தவறு இல்லை: தொழில் துறையினர் கருத்து
சென்னை: 'தமிழகத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களுக்கும், அரசு மருத்துவ சேவைகள் எளிதாக புரியும் வகையில், தகவல்கள் வழங்கப்படுவதில் தவறு இல்லை' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலர் குமார் துரைசாமி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர். விவசாயம் தொடங்கி தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், கட்டுமான தொழில் என, அவர்கள் பணியாற்றாத துறையே இல்லை என்ற அளவுக்கு, தமிழகத்தின் பொருளாதார இயக்கத்தில், அவர்களின் பங்களிப்பு இருக்கிறது.
தமிழகத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட, அரசு மருத்துவ கட்டமைப்பையே பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள், தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பை பாராட்டி பேசியுள்ளனர்.
இந்த சூழலில், அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும் 'கவர்'கள், மூன்று மொழிகளில் அச்சிடப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி, தற்போது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.
தமிழ் சமூகமாக இருந்தாலும் சரி, வட மாநில தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் இந்த மண்ணில் வாழும் மக்கள் என்ற அடிப்படையில், அவர்களின் பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்வது தான், ஒரு சமூகத்தின் மனிதநேய அணுகுமுறை.
தமிழகத்தில் பணியாற்றி வரும் வட மாநில தொழிலாளர்களுக்கும், அரசு வழங்கும் மருத்துவ சேவைகள் எளிதாக புரியும் வகையில், தகவல்கள் வழங்கப்படுவதில் தவறு இருப்பதாக கருதவில்லை.
ஏனெனில், அவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் மொழி புலமை பெரும்பாலும் இருக்காது. எனவே, மூன்று மொழிகளில் தகவல் அச்சிடப்படுவதை, தமிழை தாழ்த்துவதாக பார்க்காமல், மக்களுக்கு மருத்துவ சேவை சென்றடைவதை எளிதாக்கும் ஒரு நடைமுறையாகவே பார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
@block_B@
கரூர், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், மாத்திரை கவர்களில், தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தியிலும் குறிப்புகள் இருந்தன. இதற்கு, தி.மு.க., முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2025 டிசம்பரில், மத்திய சிறையிலிருந்து வரும் கவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், ஈரோடு மாவட்ட அச்சக தொழில் கூட்டுறவு சங்கம் வாயிலாக, நான்கு லட்சம் கவர்கள் அச்சிட, கடந்த தி.மு.க., ஆட்சியில் அவசர ஆணை வழங்கப்பட்டது. அந்த கவர்கள், இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே, அதாவது தி.மு.க., ஆட்சிக் காலத்திலேயே புழக்கத்துக்கு வந்து விட்டன.
தங்கள் ஆட்சியிலேயே இவை புழக்கத்துக்கு வந்தபோது வாய்மூடி, கைகட்டி மவுனியாக இருந்த தி.மு.க.,வினர், இப்போது திடீரென மொழிப்போர் காவலர்கள் போல் வேடம் போடுகின்றனர். இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்தவுடனேயே, கரூர் மற்றும் கோவை ஆகிய இரு மாவட்டங்களிலும், அந்த மாத்திரை கவர்களின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு உள்ளது. இரு மொழி கொள்கையில் எப்போதும் சமரசம் செய்ய மாட்டோம். தி.மு.க.,வினர், இனியாவது மலிவான அரசியலை விடுத்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.block_B
மேலும்
-
ராகுல் சந்திப்பை தவிர்க்கும் விஜய்; பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பு
-
மொத்த கவனமும் நாற்காலியை காப்பாற்றுவதில் தான்: முதல்வர் விஜயை விமர்சிக்கும் ஸ்டாலின்
-
மதமாற்றத்திற்கு வெளிநாட்டு நிதி; இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
-
தினமலர் செய்தி எதிரொலி; ஜமாத் அறிவிப்பு பலகை அகற்றம்
-
கடிந்து கொண்டார் கணவர்; கவுரவித்தது திரையுலகம்
-
தன்னிச்சையாக போராட்டம் நடத்துவதா?: ராகுல் மீது இண்டி கூட்டணி தலைவர்கள் அதிருப்தி