17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த இண்டிகோ விமானத்தில் மின்னல் தாக்கியது; அவசர தரையிறக்கம்

4

-நமது நிருபர்-
பாட்னாவிலிருந்து லக்னோ சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானம், 17,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் அதன் முன்பகுதி சேதமடைந்தது. 104 பயணிகளுடன் விமானத்தை சாதுர்யமாக செயல்பட்டு விமானி பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

மோசமான வானிலைக்கு மத்தியில், பாட்னாவிலிருந்து லக்னோவை நோக்கி 104 பயணிகளை ஏற்றிச் சென்ற இண்டிகோ விமானம் நேற்று மதியம் 3:10 மணிக்கு புறப்பட்டது; மாலை 4:20 மணிக்கு லக்னோவை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது . ஆனால் விமானத்தில் 17,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியது. மாலை 4:05 மணியளவில் விமானம் லக்னோவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர்; யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

மின்னல் தாக்கியதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லக்னோ விமான நிலையத்தில் அந்த விமானம் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. விமான நிறுவனம் பயணிகளுக்காக மற்றொரு விமானத்திற்கு ஏற்பாடு செய்தது. அதனைத் தொடர்ந்து, 104 பயணிகளும் மாலை 6:22 மணியளவில் அந்த மாற்று விமானத்தில் ஆமதாபாத் புறப்பட்டனர்.

சேதம் அடைந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

Advertisement