இடைத்தேர்தல் முடிவுகள்; திமுகவுக்கு சத்திய சோதனை

-நமது நிருபர்-

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள், திமுகவுக்கு சத்திய சோதனையாக அமைந்துள்ளன. இரு தொகுதிகளிலும் இரண்டாமிடம் பெற்று விடலாம் என்பது தான் அந்த கட்சிக்கு கிடைத்திருக்கும் ஒரே ஆறுதல்.

தமிழக பொதுத்தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய விஜய் தலைமையிலான அரசு, லஞ்ச ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அரசு ஒப்பந்தங்கள், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட பலவற்றிலும் திமுக ஆட்சியில் இருந்த 'பார்ட்டி பண்ட்' முறை இனி கிடையாது என்று தவெக அரசு அறிவித்ததற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அது மட்டுமின்றி, 'யாரேனும் லஞ்சம் கேட்டால், தர முடியாது என்று சொல்லுங்கள்' என்று தமிழக முதல்வரே நேரடியாக அறிவித்த நிகழ்வும், தவெக ஆட்சியில் தான் நடந்திருக்கிறது. இத்தகைய காரணங்களால், திமுக அரசை காட்டிலும் தவெக அரசு சிறப்பாகவே செயல்படுகிறது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இருக்கிறது.

எனினும், தினமும் திமுக தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் அரசு மீது ஏதேனும் குற்றம் கூறி பேசுவதையும், அறிக்கை விடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அவர்களது அறிக்கை, பேட்டி, பேச்சு எதையும் மக்கள் பொருட்படுத்தவில்லை என்பதை தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்தி விட்டன.

'ஏதாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டால், அரசியலில் கம்பு சுற்றுவதற்கு வசதியாக இருக்கும்' என்று காத்திருந்த திமுக தலைமைக்கு சாட்டையடி தருவது போல் தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன. 'அவர்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல், இரு தொகுதியிலும், இரண்டாமிடம் பெற்று விட்டது தான்' என்கின்றனர், அரசியல் ஆர்வலர்கள்.

Advertisement