அமெரிக்காவில் படிக்கப் போகும் இந்திய மாணவர்களுக்கு பேரிடி: வேலைக்கு தனியாக ரூ.68 லட்சம் வசூலிக்க பரிந்துரை

35

​வாஷிங்டன்: அமெரிக்காவில் உயர்கல்வி முடிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தற்காலிகமாகப் பணிபுரிய உதவும் ஓ.பி.டி., திட்டத்திற்கு, விண்ணப்பக் கட்டணமாக சுமார் 70,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.68 லட்சம்) வசூலிக்க டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. இது இந்திய மாணவர்கள் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் பயிலும் சர்வதேச மாணவர்கள், படிப்பு முடிந்ததும் ஓராண்டு காலம் வரை அங்குள்ள நிறுவனங்களில் வேலை பயிற்சி பெற ஓ.பி.டி., திட்டம் (ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்) வழிவகுக்கிறது. அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகளை முடிப்போருக்கு கூடுதலாக இரண்டு ஆண்டுகள் பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிடைக்கும் பணி அனுபவத்தை வைத்தே சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா போன்ற பலரும் பின்னர் எச்-1பி விசா பெற்று உயர்ந்த நிலையை அடைந்தனர்.

இந்நிலையில் தற்போது புதிய விதிகளை டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது, இதன்படி, ​ஒரு வெளிநாட்டு மாணவர் முதல்முறையாக 'ஓ.பி.டி.,' மூலம் பணியில் சேர விண்ணப்பிக்க 70,000 டாலர் (ரூ.67.75 லட்சம்) கட்டணம் செலுத்த வேண்டும்.

​அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் படித்த மாணவர்களுக்கு வழங்கப்படும் 24 மாத நீட்டிப்புக்கு கூடுதலாக 30,000 டாலர் (ரூ.29 லட்சம்) கட்ட வேண்டும். ​மொத்தத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிய சுமார் 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.96.8 லட்சம்) செலவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

​சட்டப்படி இந்தக் கட்டணத்தை மாணவர்களைச் சேர்க்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களே ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டாலும், அந்தத் தொகையை மாணவர்கள் அல்லது பணி வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கல்லூரிகள் வசூலித்துக் கொள்ளலாம் என விதிகள் கூறுகின்றன. இதனால் கடைசியில் இந்தச் சுமை மாணவர்கள் தலையிலேயே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

​

இந்திய மாணவர்களுக்கு பலத்த அடி:



​அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் 31 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்களே. ​கடந்த ஓராண்டில் மட்டும் 3.63 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயிலச் சென்றுள்ளனர். ​இதில் 1.43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓ.பி.டி., திட்டத்தின் மூலம் பணிபுரிந்து வருகின்றனர்.

கம்ப்யூட்டர், இன்ஜினியரிங் படிப்புகளுக்காகப் பெருந்தொகையைக் கடனாகப் பெற்று அமெரிக்கா செல்லும் இந்திய நடுத்தரக் குடும்பத்து மாணவர்களுக்கு, இந்தக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தால் அமெரிக்கக் கனவு எட்டாக்கனியாகிவிடும்.

​மாறும் பார்வை:



​வெளிநாட்டினரால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதாகக் கூறி, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கடுமையான திட்டம் அமலுக்கு வந்தால், இந்திய மாணவர்கள் அமெரிக்காவைத் தவிர்த்துவிட்டுப் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா போன்ற மாற்று நாடுகளை நோக்கிச் செல்லக்கூடும் என்று கல்வித்துறை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement