'டெட்' தேர்ச்சி உண்மை தன்மை சான்று வழங்க வலியுறுத்தல்

மதுரை: தமிழகத்தில் டெட் தேர்வு தேர்ச்சி பெற்ற பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு உண்மை தன்மை சான்று விரைந்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவஞானம் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் 2025 நவ., 15, 16ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வுகளை (டெட்) 4.24 லட்சம் பேர் எழுதினர். 1.50 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் பல ஆயிரம் ஆசிரியர்கள் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுவோரும் அடங்குவர். இவர்களுக்கு தேர்ச்சிக்கான இ சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டது. ஆனால் பணிப் பதிவேட்டில் (எஸ்.ஆர்.,) அச்சான்றுக்கான உண்மைத் தன்மை சான்று பெற வேண்டும்.

இதற்காக மாவட்ட கல்வி அலுவலங்களில் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பல மாவட்டங்களில் இதுவரை வழங்கவில்லை. குறிப்பாக உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் 8 மாதங்களுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். இதனால் பதவி உயர்வு, பணப் பலன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சான்றை விரைந்து வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Advertisement