கோவில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை என்ன: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை

2

மதுரை: கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியது.

ஆழ்வார்குறிச்சி ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: துாத்துக்குடியில் சங்கரராமேஸ்வரர் மற்றும் வைகுண்டபகுதி கோயில்கள் உள்ளன. இவற்றிற்குச் சொந்தமான சொத்துக்களை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். சில அதிகாரிகளின் துணையுடன் கோயில் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுகின்றனர். அத்துடன் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி அறநிலையத்துறைக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இரு கோயில்களிலும் குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களுக்கான வாடகையை செலுத்த தவறியவர்களின் பட்டியல், நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து செயல் அலுவலர்கள் தரப்பில் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர்: கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை இல்லை.அரசு தரப்பு வழக்கறிஞர்: திருச்செந்துார் கோயிலில் ரூ.1 கோடியே 50 லட்சம் வாடகை பாக்கி உள்ளது.

நீதிபதிகள்: கோயில் சொத்துக்களை குத்தகைக்கு எடுத்து வணிகம் செய்வோர் வாடகை நிலுவையை செலுத்தாமல் இருக்க காரணம் என்ன?

வாடகை செலுத்தவில்லை எனில் கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கலாமே. தற்போது கோயில் சொத்துக்களில் அதிகாரிகளும் முறைகேடு செய்ய துவங்கிவிட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாறும். அதிகாரிகள் மாறுவர். கோயில் சொத்துக்களில் முறைகேடு செய்தவர்கள் தப்பித்துக் கொள்ளலாம் என கருதுகின்றனர்.

நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தால் முன்பு அதிகாரிகளுக்கு அச்சம் இருக்கும். தற்போது அது இல்லை. கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறநிலையத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு வாதம் நடந்தது. விசாரணையை நீதிபதிகள் 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement