கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை உயர்வு: பண்டிகை நேரத்தில் நெருக்கடி

1

சென்னை:

கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளதால், பண்டிகை நேரத்தில் பொதுமக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடலை எண்ணெய் தயாரிப்பதற்கான நிலக்கடலை, நல்லெண்ணெய் தயாரிப்பிற்கான எள், பல்வேறு மாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு எடுத்து வரப்படுகிறது. பெரிய ஆலைகளில் மட்டுமின்றி, சிறிய அளவிலான செக்குகளில் ஆட்டியும், இந்த எண்ணெய் வகைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. ஆனால், நாடு முழுதும், நிலக்கடலை, எள் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது.அவற்றின் விலையும் திடீரென உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மளிகை சந்தையில், மொத்த விற்பனையில், ஒரு லிட்டர் கடலை எண்ணெய், 185 முதல் 240 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.

நடப்பு வாரத்தில் மட்டும், லிட்டருக்கு, 12 ரூபாய் வரை, படிப்படியாக விலை அதிகரித்துள்ளது.

இதேபோல, ஒரு லிட்டர் நல்லெண்ணெய், 380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. லிட்டருக்கு, 10 ரூபாய் வரை, நல்லெண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மத்திய அரசு இறக்குமதிக்கான வரியை, முழுமையாக ரத்து செய்துள்ளதால், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாமாயில் விலை கணிசமாக குறைந்துஉள்ளது. உக்ரைன் நாட்டில் இருந்து, சூரியகாந்தி எண்ணெய், மலேஷியா, தாய்லாந்து நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு சுத்திகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில், சூரியகாந்தி எண்ணெய் ஒரு லிட்டர், 158 முதல் 167 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை விட, தற்போது லிட்டருக்கு ஏழு ரூபாய் வரை குறைந்துள்ளது. பாமாயில் ஒரு லிட்டர், 136 முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தை விட, லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைந்துள்ளது.

பண்டிகை நேரத்தில், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், அவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும், உணவு வகைகள் விலை உயர வாய்ப்புள்ளது. இது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement