அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்க மறுத்ததை எதிர்த்து பொதுநல வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

-–சிறப்பு நிருபர்–: அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழக சட்டசபையில் த.வெ.க., அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கட்சி கொறடா உத்தரவை மீறி, 25 அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். பின்னர் அவர்களில், ஆறு பேர், எம்.எல்.ஏ., பதவிகளை ராஜினாமா செய்தனர். எஞ்சிய, 19 எம்.எல்.ஏ.,க்களும், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினர். இதையடுத்து, அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க கோரிக்கை மனுவை திரும்ப பெறுவதாக, சபாநாயகர் பிரபாகருக்கு, பழனிசாமி கடிதம் அளித்தார்.

இதனை ஏற்று, 19 எம்.எல்.ஏ.,க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கைகளை சபாநாயகர் கைவிட்டார். இந்நிலையில், சபாநாயகரின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘சட்ட விதிகளின்படி, 15 நாட்களுக்குள் மன்னிப்பு கோரி எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் வழங்கியதால், தகுதி நீக்கம் என்ற கோரிக்கையே எழவில்லை. எனவே, சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிட்டது சரி’ என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர் செல்வகுமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ‘கட்சித் தாவல் தடை சட்டத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் மன்னிப்பு கடிதத்தை ஏற்று தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிட்டது சட்டவிரோதமானது. எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ-க்கள் மீது சட்டப்பூர்வ தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement