மறுவாழ்வு மையங்களின் நிலை என்ன?

- –சிறப்பு நிருபர்–: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்களின் தற்போதைய நிலை குறித்து மாநில வாரியாக தரவுகளை சேகரித்து, அதை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுதும் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்களை முறைப்படுத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா அமர்வில் நேற்று இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகுல் பஜாஜ், ‘‘மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக செயல்படும் மறுவாழ்வு மையங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை அமலில் இருக்கிறது.

எனினும், அந்த மையங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு இயங்குகின்றனவா என்பது குறித்த தரவுகள் அரசிடம் இல்லை,’’ என்றார்.

இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நாடு முழுதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்கள் தற்போது எப்படி செயல்பட்டு வருகின்றன. மனநல காப்பங்களுக்கான குறைந்தபட்ச தரநிலைகளை மாநில அரசுகள் அமல்படுத்தி இருக்கிறதா. மறுவாழ்வு மையங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஆய்வு, கண்காணிப்பு நடைமுறைகளின் விபரங்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு சேகரிக்க வேண்டும். பின்னர், அதை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்., 22ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement