பெரிய வெங்காயத்துக்கு பதிலாக முட்டைக்கோஸ்

திருப்பூர்: பெரிய வெங்காயம் விலை உயர்ந்துள்ள நிலையில், திருப்பூர் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்க்கெட்டுகளில் முட்டைக்கோஸ்க்கு திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.

ஓட்டல், கையேந்திபவன் உள்ளிட்ட உணவகங்களில் வெங்காயத்துக்கு மாற்றாக முட்டைக்கோஸை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

வெளிமாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து ஓரளவு இயல்புக்கு திரும்பியுள்ள போதிலும், கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தர வெங்காயம் ரூ.50-க்கு விற்கிறது.

வெங்காயத்தின் விலை உயர்வால் ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் ஆம்லெட், பிரைட் ரைஸ், நுாடுல்ஸ், சாட் உள்ளிட்ட உணவுகளில் வெங்காயத்துக்கு பதிலாக மெல்லிய தாக நறுக்கிய முட்டைகோஸை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

மழை காரணமாக முட்டைகோஸ் வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் இருந்தது.

கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரையும், 50 கிலோ கொண்ட மூட்டை ரூ.650 முதல் ரூ.740 வரையும் விற்பனையானது.

தற்போது விற்பனை அதிகரித்துள்ளதால், விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதல் ஏற்பட்டுள்ளது.

அவரை விலை ரூ.100





பருவம் தவறி பெய்த மழையால் அவரை செடிகளில் பூக்கள் உதிர்ந்து, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரத்து பாதியாக குறைந்துள்ளது.

வரத்து குறைந்த நிலையில், அவரையை தேடி வாங்குவோர் அதிகரித்ததால், நேற்று கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

Advertisement