துாய்மை பணி டெண்டரில் 32 சதவீதம் குறைவு ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்க தடையாய் தி.மு.க., மேயர்
கரூர்: கரூர் மாநகராட்சியில், துாய்மை பணியை, 32 சதவீதம் குறைவாக எடுத்த ஒப்பந்ததாரருக்கு ‘ஒர்க் ஆர்டர்’ கொடுக்க, கரூர் மாநகராட்சி, தி.மு.க., மேயர் கவிதா, முட்டுக்கட்டை போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் மாநகராட்சியில், பல்வேறு பணிகளுக்கு, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இ.-டெண்டர் கோரப்பட்டது. இதில், வார்டுகளில் துாய்மை பணிக்கு, நான்கு மண்டலங்களில், ஐந்து மாதத்திற்கு மண்டலத்திற்கு தலா, 45.98 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம், 1.83 கோடி ரூபாய், அரசு பள்ளிகள் துாய்மை பணி, 4 மண்டலங்களில், 10 மாதத்திற்கு மண்டலத்திற்கு தலா, 45.97 லட்சம் வீதம் மொத்தம், 1.83 கோடி ரூபாய், டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு, 4 மண்டலங்களுக்கு, 6 மாதத்திற்கு மண்டலத்திற்கு தலா, 35 லட்சம் வீதம் மொத்தம், 1.40 கோடி ரூபாய் என மொத்தம், 5.06 கோடி மதிப்பீட்டில் இ-.டெண்டர் விடப்பட்டது.
டெண்டர்களில் ஒரு காசு கூட கமிஷனோ, கட்சி நிதியோ கொடுக்க தேவையில்லை; பணிகள் நேர்மையாக நடக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளதால், ஒப்பந்ததாரர்களிடையே கடும் போட்டி நிலவியது.
இதனால், வார்டுகள் துாய்மை பணிக்கு, 25.99 சதவீதம் குறைவாகவும், பள்ளி துாய்மை, டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு, 31.98 சதவீதம் குறைவாகவும் ஒப்பந்ததாரர்கள் பணிகளை எடுத்துள்ளனர்.
இதன்மூலம் அரசு கஜானாவுக்கு, 1.51 கோடி ரூபாய் நேரடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 28-ல், மாநகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், இந்த டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை, ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்காமல் இழுத்தடித்து செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:
முந்தைய ஆட்சியில், இதே பணிகளுக்கான டெண்டர்களில், 0.03 சதவீதம் குறைவாக கோரப்பட்டு, வேண்டியவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டன. தற்போது, வெளிப்படையான இ-–டெண்டர் நடைமுறையால், மாநகராட்சிக்கு நிதி மிச்சப்பட்டுள்ளது. இருப்பினும், கவுன்சிலர் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மான பதிவேட்டில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் கவிதா கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதனால் புதிய ஒப்பந்ததாரர்களுக்கு, ‘ஒர்க் ஆர்டர்’ வழங்கப்படாமல், பழைய ஒப்பந்ததாரரே பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் மாநகராட்சிக்கு தேவையற்ற நிதி இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மேயர் கவிதா கூறுகையில், ‘‘எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், 10 நாட்களாக மாநகராட்சி அலுவலகம் வரவில்லை. இதனால், தீர்மான பதிவேட்டில் கையெழுத்து போடவில்லை,’’ என்றார்.
மேலும்
-
பைனல்(பெயர் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. பட விளக்கத்திலும் மாற்றிக்கொள்ளவும்) ரேஷன் விற்பனையாளர் மூளைச்சாவு இரு சிறுநீரகங்கள், கல்லீரல் தானம்
-
தகராறில் மனைவி கொலை கணவருக்கு ஆயுள் தண்டனை
-
மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணி தீவிரம்
-
தென்னிந்தியாவின் அடுத்த ஐ.டி தலைநகர் கோவை
-
கரு பாலினத்தை கண்டறிந்து கூறிய இருவருக்கு ‘குண்டாஸ்’
-
தீயணைப்பு அலுவலக லஞ்ச வழக்கு சிறப்பு குழு விசாரணையில் பகீர் தகவல்