தகராறில் மனைவி கொலை கணவருக்கு ஆயுள் தண்டனை

பெரம்பலுார்: தகராறில் மாரியம்மாள், 48, என்பவரை கத்தியால் குத்திக்கொன்ற அவரது கணவர் தங்கவேல், 52, என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பெரம்பலுார் மாவட்டம், தொண்டமாந்துறையை சேர்ந்தவர் தங்கவேல். கொத்தனரான இவர், 2025 பிப்., 16ம் தேதி மனைவி மாரியம்மாளிடம், மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர், பணம் தர மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தங்கவேல், மாரியம்மாளை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த மகள் கவிதா, 23, என்பவருக்கும் முதுகில் கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த மாரியம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த கவிதா, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கவிதா புகாரில், அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிந்து தங்கவேலை கைது செய்தனர். அதன்பின் அவர், ஜாமினில் வெளியே வந்தார்.

இந்த வழக்கு, பெரம்பலுார் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், குற்றவாளி தங்கவேலுக்கு ஆயுள் தண்டனையும், 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement