ஒரு வாரமாக குடிநீர் வராததை கண்டித்து மறியல் போராட்டம்

பள்ளிப்பாளையம்:காடச்சநல்லுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் இல்லாததால், ஆவேசமடைந்த மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், காடச்ச நல்லுார் பஞ்.,க்கு உட்பட்ட சத்யா நகர், காடச்ச நல்லுார் மற்றும் சுற்று பகுதியில் ஏராளமான குடியிருப்பு உள்ளது. கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் வழங்க வில்லை. இதனால் அப்பகுதி மக்கள், தண்ணீரை சீராக வழங்க வேண்டும் என, பஞ்., அலுவலகத்திலும் தெரிவித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள், காலி குடங்களுடன் நேற்று மாலை 5:00 மணிக்கு, காடச்சநல்லூர் பகுதியில், ஈரோடு செல்லும் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. பள்ளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பொது மக்கள் தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என, தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை வலுக்கட்டயமாக அகற்றினர். இதனால் பொது மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர், தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் தெரிவித்ததால் மக்கள் கலைந்து சென்றனர். மறியலால், 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement