தொடர் போராட்டம் எதிரொலி; டில்லியில் 57 மெட்ரோ நிலையங்கள் மூடல்

புதுடில்லி: தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக இண்டி கூட்டணி மற்றும் மாணவர் அமைப்பினர், டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கைது செய்து, போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியினர், மாணவர் அமைப்பினர் போராட்டத்தை தீவிரப்படுத்த தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில், கரப்பான் பூச்சி அமைப்பினரும் நாளை (அக்.,10) போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

எனவே, மாணவர்கள் டில்லியில் குவிவதை தடுக்கும் பணியில் டில்லி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பிற மாநிலங்களில் இருந்து டில்லிக்கு வரும் மாணவர்கள், பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி, இறக்கி விடப்படுகின்றனர்.

மாணவர்கள் டில்லி ஜந்தர் மந்தருக்கு வருவதை தடுக்கும் விதமாக, இன்று இரவு 9 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை, 57 மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவதாக டில்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து டில்லிக்கு செல்லும் 11 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு ரயில்களின் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Advertisement